1400.ஆடுகின்றனர்; பண் அடைவு இன்றியே
பாடுகின்றனர்; பார்த்தவர்க்கே கரம்
சூடுகின்றனர்; சொல்லுவது ஒர்கிலர்;
மாடு சென்றனர்; - மங்கையர் நால்வரே.

     மங்கையர் நால்வர் - நான்கு மகளிர் (இராமன் முடிபுனை செய்தியை
அறிந்த மகிழ்ச்சியராய்அதனால்); ஆடுகின்றனர் - ஆடிக் கொண்டு; பண்
அடைவு இன்றியே பாடுகின்றனர்
-இசை முறைக்குச் சிறிதும் ஒழுங்கு
இல்லாமல் பாடிக்கொண்டு;  பார்த்தவர்க்குக் கரம் சூடுகின்றனர் -
தம்மைப் பார்த்தவர்களையெல்லாம் கைகளைத் தலைமேல் சூடி
வணங்கிக்கொண்டு;சொல்வது ஓர்கிலர் - என்ன சொல்வது என்று
சிந்தியாதவர்களாகி; மாடு சென்றனர் -கோசலை பக்கல்  சென்று
சேர்ந்தார்கள்.

     மேற்பாட்டின் தொடர்ச்சி  இதுவாதலின் மங்கையர் நால்வர் ஓடினர்
என உரைத்தார். ஆடி,  பாடி,  பார்த்தவர்க்குக் கரம்  சூடி,  சொல்லுவது
ஓராது,  கோசலை பக்கலில் சென்றனர்என முடித்துக் காட்டுக.  மகிழ்ச்சி
மிகுதி உடையவர்கள் எதிரிற் கண்டவர்களை எல்லாரையும்கும்பிடுதலும், 
ஆடிப் பாடுதலும் சொல்லுவது  அறியாதிருத்தலும் இயல்பு. “வேதியர்
தமைத்தொழும்;வேந்தரைத் தொழும்; தாதியர் தமைத்தொழும்; தன்னைத்
தான் தொழும்; ஏதும் ஒன்று உணர்குறாதுஇருக்கும்; நிற்குமால்: - காதல்
என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே” எனவும், “ஆடும்பாடுமால்”,  
எனவும் (கம்ப. 10202. 10201) பரதனது  மகிழ்ப்பெருக்கைக் கம்பர் பின்னர்க்
காட்டியுள்ளமை கண்டும் அறிக. ‘ஏ’ இரண்டும் அசைகள்.              2