கோசலையின் மன நிலை 1403. | ‘சிறக்கும், செல்வம் மகற்கு’ என, சிந்தையில் பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற, வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால் - துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே. |
(அது கேட்ட கோசலைக்கு) ‘மகற்குச் செல்வம் சிறக்கும்’ என - தன் மகனாகிய இராமனுக்குஅரசச் செல்வம் சிறக்க இருக்கிறது என்று; சிந்தையில் - மனத்தில்; பிறக்கும்பேர் உவகைக் கடல் - தோன்றிய பெரிய மகிழ்ச்சிக் கடல்; பெட்பு அற-பெருமையற்றுப் போக; மன்னவன் - தன் நாயகனாகிய தயரதன்; துறக்கும் - துறந்து செல்வான்; என்னும் துணுக்கம் - என்கின்ற அச்சமானது; வறக்கும் - வறண்டுபோகச்செய்யும்; மா - பெரிய; வடவைக்கனல் - வடவைத் தீயை; ஆனது - ஒத்திருக்கிறது. மகன் முடிசூடுவான் என்ற மகிழ்ச்சியை, மன்னன் துறப்பான் என்ற அச்சம் அடக்கிவிட்டது என்பதை இவ்வாறு கூறினார். வடவைத்தீ - வடவை முகத்தோடு கூடிய நெருப்பு; வடவை - பெண் குதிரை. இந்நெருப்பு கடலின் இடையே உள்ளது எனவும், கடல் நீரை ஓரளவுக்கு மிகாது சுவறச் செய்யும் ஆற்றல்உடையது எனவும், ஊழிக்காலத்தில் மேல எழும்பி கடல் நீர் அனைத்தையும் வற்றச் செய்துவிடும்எனவும் புராணிகர் கூறுவர். உவகைக் கடல், வடவைக் கனல் என்பன உருவகம். “உறத்தகும் அரசு இராமற்கென்றுஉவக்கின்ற மனத்தைத் துறத்தி நீ எனும் சொற்சுடும் ” (1358.) என்ற சுமந்திரன் வார்த்தையை இங்குஒப்பு நோக்குக. ‘ஆல்’ ஈற்றசை. 5 |