1407. | என்று இறைஞ்சி, அவ் இந்திரை கேள்வனுக்கு ஒன்றும் நான்மறை ஒதிய பூசனை நன்று இழைத்து, அவண், நல்ல தவர்க்கு எலாம் கன்றுடைப் பசுவின் கடல் நல்கினாள். |
என்று- என்று வேண்டி; இறைஞ்சி - வணங்கி; அவ் இந்திரை கேள்வனுக்கு - அந்த இலக்குமி நாயகனாகிய நாராயணனுக்கு; ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை - பொருந்திய வேதங்களிற்சொல்லப் பட்ட முறைமையில் ஆன வழிபாட்டை; நன்று இழைத்து - நன்றாகச் செய்து; அவண் -அவ்விடத்தில்; நல்ல தவர்க்கு எலாம் - நல்ல தவத்தோர்களுக்கெல்லாம்; கன்றுடைப்பசுவின் கடல் - கன்றோடு கூடிய பசுவின் கூட்டங்களை; நல்கினாள் - தானமாகக் கொடுத்தாள். ஸ்ரீ நாராயணனை வழிபட்டு, வழிபாட்டின் முடிவில் கோதானம் செய்தாள். 9 |