இராமனுக்கு உறுதி கூறும்படி தயரதன் வசிட்டனை வேண்டுதல்

1409.‘நல் இயல் மங்கல நாளும் நாளை; அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு, ‘வேண்டுவ
ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது’ என, தொழுது சொல்லினான்.

     (தயரதன் வசிட்டனைப் பார்த்து) ‘நல் இயல் மங்கல நாளும்
நாளை
- நல்ல இயல்புகளையுடைய( கோள் நிலை உடைய ) முகூர்த்த
நாளும் நாளைக்கேயாகும்;  (ஆதலால்) அவ் வில் இயல் தோளவற்கு-
அந்த வில்பழகிய தோள் உடையவனாகிய இராமனுக்கு;  ஈண்டு -
இவ்விடத்தில்;  வேண்டுவ- வேண்டியனவாய விரதம் முதலிய சடங்கு
களை;  ஒல்லையின் - விரைவாக;  இயற்றி - செய்து;  (அதன்மேல்) நல்
உறுதி
- நல்ல அரசியல் அறமாகிய; வாய்மையும் - உண்மைகளையும்; 
பெரிது சொல்லுதி -மிகவும் சொல்வாயாக;  என - என்று தொழுது -
வணங்கி; சொல்லினான் -சொன்னான்.

     பட்டாபிஷேகம் செய்வதற்குரிய முகூர்த்த தினமும், தினசுத்தமும், 
கோளும் நாளும்  நன்னிலைநிற்க அமைதலும் முதலியன வேண்டுதலின்
அது மிக அரிதாகவே அமைதலின்,  நாளைக்கே நல்லியல் மங்கலநாள்
என்றனர் கணிதநூல் வல்லோர். உடனே செய்ய வேண்டிய முடிசூட்டு
விழாவிற்கு  முன்னதாகிய சடங்குகளைவிரைவில்  செய்ய வேண்டுதலின்
‘ஒல்லையின் இயற்றி’ என்றான். ஆசிரியனாக இருந்து கற்பித்தான்ஆதலின்
அரசியல் உறுதிகளை எடுத்துரைக்க வசிட்டனை வேண்டினான் தயரதன். 11