வசிட்டன் இராமனுக்குக் கூறிய அறவுரை  

1412.என்று, பின்னும் இராமனை நோக்கி, ‘நான்
ஒன்று கூறுவது உண்டு, உறுதிப்பொருள்;
நன்று கேட்டு, கடைப்பிடி நன்கு’ என,
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான்;

     என்று - என்று சொல்லி; பின்னும் - மேலும்; இராமனை நோக்கி -
இராமனைப் பார்த்து;  ‘நான் கூறுவது உறுதிப்பொருள் ஒன்று உண்டு -
நான் (உனக்குச்)சொல்ல வேண்டுவதாய் நன்மைப் பொருள் ஒன்று  உள்ளது;
நன்று கேட்டு - அதைக் கவனித்துக்கேட்டு; நன்கு கடைப்பிடி -
அழுத்தமாகப் பின்பற்றுவாயாக;’   எனா - என்று; துன்று தாரவன்(ற்) -
நெருங்கிய மாலை அணிந்த இராமனுக்கு; சொல்லுதல் மேவினான் - 
சொல்லத் தொடங்கினான்;

     உறுதிப்பொருள் - நன்மைதரும்  செய்தி - அறவுரை என்றாகும்.
‘ஒன்று’ என்று  கூறுவது  தொடங்குங்காற்கூறும் வழக்குப்பற்றி.  பின்னர்ப்
பலவும் கூறினும் அவையெல்லாம்  ‘உறுதிப்பொருள்’  என்ற ஒன்றில்
அடங்குதலின் அதுபற்றி ஒன்றும் ஆகும்  கடைப்பிடி உறுதியாகப் பற்றுதல்
ஆகும்.  இறுதிவரை விடாதுஒழுகுதல் கடைப்பிடியாம். ‘துன்றுதாரவன்’
எனச் சந்தி பிரியாதது அங்ஙனம் பிரிப்பின் எழுவாய்த்தொடராய்ப்
பொருள்தந்து மயக்கமாம் ஆதலின் இது வேற்றுமைத் தொகைநிலைத்தொடர்
என்பது உணர்தற்குமஈறு மெய்திரிதலாகியபுணர்ச்சிபெற்ற நிலையில்
‘தாரவற்’ எனப் பிரித்துக்காட்டியமை போற்றி உணர்க.               14