1423. | ‘வையம்ம மன் உயிர் ஆக, அம் மன் உயிர் உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு, ஐயம் இன்றி, அறம் கடவாது, அருள் மெய்யில் நின்றபின், வேள்வியும் வேண்டுமோ? |
‘வையம் - உலக மக்கள்; மன் உயிர் ஆக - நிலைத்த உயிராக; அம்மன் உயிர் - அந்த நிலைத்த உயிர்களை; உய்ய - வாழும்படி; தாங்கும் -சுமக்கின்ற; உடல் அன்ன மன்னனுக்கு - உடம்பை ஒத்த அரசனுக்கு; ஐயம் இன்றி- மேற்கொண்ட நெறியின் உறுதிபற்றிய சந்தேகம் இல்லாமல்; அறம் கடவாது அருள் மெய்யில் நின்றபின் - அறத்தை விட்டு விலகாது அருளிலும், சத்தியத்திலும் நிலைபெற்று நின்ற பிறகு; வேள்வியும் வேண்டுமோ - யாகங்களும் செய்தல் வேண்டுமோ’ (வேண்டாம் என்றபடி.) அரசர்கள் பெரிய இராயசூயம், வாஜபேயம், அசுவமேதம் முதலிய யாகங்களைச் செய்தல் வேண்டும்என்பார். ஆயினும், அறம், அருள், சத்தியம் என்ற மூன்றிலும் நிலைத்து நின்று அரசாட்சிசெய்யின் அதுவே யாகமாம்; வேறு யாகம் செய்யவேண்டுவது இல்லை என்றாராம். “செயிர் இலாஉலகினில் சென்று நின்று வாழ், உயிர்எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்” 177) என்று தயரதனைப் பற்றி முன்னர்க் கூறியவாறு, மக்களை உயிராகவும் மன்னனை உடலாகவும் கூறுவது கம்பரின்முடியரசில் குடியரசுக் கொள்கையாம். சங்ககாலத்தில் “நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம், அதனால், யான் உயிர் என்பது அறிகை, வேன்மிகுதானைவேந்தற்குக் கடனே’ என்று மக்களை உடலாகவும், மன்னனை உயிராகவும் கருதிக் கூறும் கொள்கை நிலைபெற்றதைக்காணலாம். (புறநா. 186.) உயிர் இல்லாத வழி உடல் இயங்காமை போல மக்கள் இல்லாதவழி மன்னனுக்குவேலை இல்லை என்பது கம்பர் கருத்து. மக்களுக்காக மன்னவனே அன்றி மன்னனுக்காக மக்கள் அல்லர்என்னும் இக்கருத்தே சாலப் பொருத்தம் உடையது அறம், அருள் சத்தியம் இல்லாதவன் யாகம் செய்வதுவீண் ஆரவாமேயன்றி வேறன்று. 25 |