1431. | ஏவின வள்ளுவர், ‘இராமன், நாளையே பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக் கோ நகர் அணிக!’ என, கொட்டும் பேரி அத் தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார். |
ஏவின வள்ளுவர் - (அரசனால்) ஏவப்பட்ட வள்ளுவர்; இராமன் -; நாளையே -நாளைக்கே; பூமகள் கொழுநனாய் - நிலமகள் கணவனாய்; மௌலி புனையும் - மகுடம்சூடுவான்; (ஆதலால்) இக்கோநகர் - இந்தத் தலைமை நகரத்தை; அணிக - அலங்கரிக்க; என - என்று சொல்லி; கொட்டும் - முழுக்குகின்ற; பேரி - முரசத்தை; அத்தேவரும் களிகொள- விண்ணுலகத்துத் தேவரும் மகிழ்ச்சிகொள்ள; திரிந்து- நகர் எங்கும் சுற்றி; சாற்றினார் - அடித்து முழக்கினார்கள். வள்ளுவர் பறையறைந்து முடிசூட்டுவிழாச் செய்தியைத் தெரிவித்தனர். தேவர் களிகொள்ளல்அரக்கர் குலம் அழியச் சமயம் அணுகியது என்பதால் ஆகும். பேரி - பெருமுரசு. கோநகர் -தலைநகர்; அரசு வீற்றிருக்கின்ற நகரம். 33 |