மக்கள் மகிழ்ந்து,  நகரை அழகு செய்தல்  

1432.‘கவி அமை கீர்த்தி அக் காளை நாளையே
புவி அமை மணி முடி புனையும்’ என்ற சொல்,
செவி அமை நுகர்ச்சியது எனினும், தேவர்தம்
அவி அமுது ஆனது, அந் நகர் உளார்க்கு எலாம்.

     கவி அமை கீர்த்தி அக் காளை - கவிதைகளில் புனையப்படும்
புகழை உடைய அந்த இராமன்;நாளையே - நாளைக்கே;  புவி அமை -
அரசு புரிதற்குரிய; மணிமுடி - அழகியமகுடத்தை; புனையும் - தரிப்பான்;
என்ற சொல் - என்ற வள்ளுவர் வார்த்தை; செவி அமை நுகர்ச்சியது
எனினும் -
காதுகளால் அணுபவிக்கப்படும் ஓசை இனிமையளவினதுதான்
ஆனாலும்; அந்நகர் உளோர்க்கு எலாம் - அயோத்தி நகரில்
உள்ளவர்களுக் கெல்லாம்;தேவர்தம் - தேவர்களது;  அவி அமுது
ஆனது -
அவியுணவையும் அமுதத்தையும்  ஒத்திருந்தது.

     செவி நுகர்ச்சிக்கு எட்டியது நிலவுலகச் சொல்லே; ஆயினும், தேவர்தம்
அமுதமெனச் சுவைப்பயன் தந்தது என்பது கருத்து.

     கீர்த்தி என்பது  கொடைப்புகழ் .“உரைப்பார் உரைப்பவை எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று, ஈவார்மேல் நிற்கும் புகழ்” என்றார் வள்ளுவரும்.
(குறள்.232) அவி - வேள்வியில் கொடுக்கப்பெறுவது.அமுதம்-பாற்கடலில்
இருந்து பெறப்பட்ட சாவா மருந்து. அவியமுது  உம்மைத்தொகை.
‘நாளையே’.‘ஏ’ தேற்றம்.                                        34