1433.ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;
வேர்த்தனர்; தடித்தினர்; சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்;
தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம்.*

     (நகர மக்கள்) ஆர்த்தனர் - ஆரவாரித்தனர்;  களித்தனர் -
மகிழ்ந்தனர்; ஆடிப் பாடினர் -;  வேர்த்தனர் - உடல் வியர்க்கப்
பெற்றனர்;  தடித்தனர் -(மகிழ்ச்சியால்) உடல் பெருத்தனர்;  மெய் -
உடம்பில்;  மயிர் சிலிர்த்துப்போர்த்தனர் - மயிர்க்கூச்செறியப் பெற்று
மூடப் பெற்றனர்;  மன்னனை - தயரதனை; புகழ்ந்து - துதித்து; 
வாழ்த்தினர் -;  சொல்லினார்க்கு எலாம் - இந் நற்செய்தியைச்
சொன்னவர்களுக்கொல்லாம்; நீள்நிதி - பெருஞ்செல்வத்தை; தூர்த்தனர்-
நிரப்பினார்கள்.

     எல்லாம் என்பது இருதிணைப் பொது. மகிழ்ச்சி மிகுதியால்
புளகாங்கிதம் அடைதல் என்பதனையே‘மெய்ம்மயிர்ச் சிலிர்த்துப்
போர்த்தனர்’ என்றார்.                                          35