1439.முத்தினின் முழுநிலவு எறிப்ப, மொய்ம் மணிப்
பத்தியின் இள வெயில் பரப்ப, நீலத்தின்
தொத்துஇனம் இருள் வரத் தூண்ட, சோதிட
வித்தகர் விரித்த நாள் ஒத்த, வீதியே,

     வீதி - (அயோத்தி நகரத்) தெருக்கள்;  முத்தினின் - (அலங்கரித்த
முத்து மாலைகளில் உள்ள) முத்துக்களால்; முழுநிலவு எறிப்ப -
முழுமையான நிலவொளியை எங்கும்விளங்கச் செய்ய; மொய் - நெருங்கிய;
மணிப் பத்தியின் - மணிக்கற்கள்வரிசை;  இளவெயில் பரப்ப -
இளமையான வெயிலைப் பரவச் செய்ய; நீலத்தின் தொத்துஇனம் -
(அழகுபடுத்திய)  நீலமணிகளின் தொகுதியான கூட்டம்; இருள் வரத்
தூண்ட
- எங்கும் இருள் உண்டாகச் செய்ய; (இவற்றால்)  சோதிட
வித்தகர்
- சோதிட நூல் அறிஞர்;விரித்த - விளக்கிக் கூறுகின்ற; நாள்
ஒத்த -
நாளை ஒத்தன.

     பகல்,  நிலவு,  இருள் ஆகியவற்றோடு கூடிய ஒருநாள் போல,
இவ்வீதிகள் மணியால் இளவெயிலும்,முத்தால் நிலவொளியும்,  நீலமணியால்
இருளும் பரப்பின என்று வருணித்தார். ‘நீல மாலைத், தஞ்சுடையஇருள்
தழைப்பத் தரளம் ஆங்கே தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால்
செஞ்சுடர வெயில்விரிக்கும் அழகு’ என்ற திருமங்கையாழ்வார் வாக்கு
(3.4.4) இக்கற்பனைக்கு மூலம்போலும்.                           41