1442. | பூ மழை, புனல் மழை, புதுமென் கண்ணத்தின் தூ மழை, தரளத்தின் தோம் இல் வெண் மழை. தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை. மா மழை நிகர்த்தன - மாட வீதியே. |
மாட வீதி - மாளிகைகளையுடைய தெருக்களில்; பூ மழை - மலர் மழையும்; புனல் மழை - (நீர் தெளித்தலால்) நீர் மழையும்; புதுமென் கண்ணத்தின் தூ மழை -புதிய மென்மையான வாசனைப் பொடியின் தூய்மையான மழையும்; தரளத்தின் தோம் இல் வெண்மழை- முத்துக்கள் சிந்துதலால் குற்றமற்ற வெள்ளிய மழையும்; இழைதாம் நெரிதலின் - பொன்னணிகள் நெருங்கி நெரிகின்ற காரணத்தால்; தகர்ந்த - (ஒன்றுடன் ஒன்று மோதி) உடைந்து பிதிர்ந்து கொட்டிய; பொன் மழை - கனக மழையும் கூடி; மா மழை-பெரியமழை பொழிவதை; நிகர்த்தன-ஒத்தன. நகரில் உள்ளவர் நீர் தெளித்து, மலர்களையும், சுண்ணப் பொடிகளையும் தூவி, முத்துகளைச்சிந்தி வீதியை அழகுபடுத்தினர், அப்போது அவர்தம் நெருக்கத்தால் அணிந்திருந்த பொன்னணிகள்மோதிப் பிதிர்ந்து பொன்மழையும் பொழிவதாயிற்று. இவையெல்லாம் பெருமழை பொழிவது போல் ஆயிற்று என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை. ‘தாம்’ உரையசை. 44 |