1446.தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்;
ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்;
கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்;
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்.

     தோன்றிய கூனியும் - அவ்வாறு வெளியில் வந்த கூனியும்;  (நகர்
அணிசெயப் பெறுவருகண்டு ஆத்திரம் அடைந்து) துடிக்கும் நெஞ்சினாள்-
கோபத்தால் துடிக்கின்ற மனமுடையவளாய்; ஊன்றிய வெகுளியாள் -
கால்கொண்டு நிலைநின்ற கோபம் உடையவனாய்;  உளைக்கும்
உள்ளத்தாள்
- வேதனைப்படும் மனம் உடையவனாய்; கான்று எரி
நயனத்தாள் -
நெருப்புக் கக்கி எரிகின்றகண்ணுடையளாய்; கதிக்கும்
சொல்லினாள் -
படபடப்பாகத் தோன்றும் சொல்லுடையவளாய்;  மூன்று
உலகினுக்கும் -
மூவுலகங்களுக்கும்;  ஓர் - ஒப்பற்ற;இடுக்கண் - (தீர்க்க
முடியாத) துன்பத்தை; மூட்டுவாள்-செய்யத் தொடங்குகிறவளாய்(ஆயினள்)

     இராமனது முடிசூட்டுவிழாச் செய்தி அறிந்த கூனி  பொறுக்கலாற்றாமல்
மனம் வெதும்பிச் சீறியபடியைக் கவி இங்ஙனம் எடுத்துக்காட்டினார்.  இவை
கோபத்தின் மெய்ப்பாடுகள். மேற்பாடலில்‘தோன்றினாள்’ என முடித்து,
இங்குத் ‘தோன்றிய’ எனத் தொடங்கியது அந்தாதித் தொடை. இச்செய்யுள்
தொடர்ந்து  சென்றுபின்னர் 1448 ஆம் பாடலில் ‘விரைவின் எய்தினாள்’
என்பதில் முடியும்.                                            48