1448.நாற் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர்
பாற்கடல் படு திரைப் பவள வல்லியே-
போல், கடைக் கண் அளி பொழிய, பொங்கு அணை-
மேல் கிடந்தாள் தனை விரைவின் எய்தினாள்.

     நாற்கடல் படு மணி - நான்கு கடல்களிலும் உண்டாகிய சிறந்த
மாணிக்கங்களால் ஆகிய;நளினம் - தாமரை மலர்கள்; பூத்தது -
பூத்ததாகிய; ஓர் - ஒப்பற்ற;பாற்கடல் படுதிரை - பாற்கடலின் அலைமேல்
பொருந்திக் கிடந்த; பவள வல்லியேபோல் - பவளக் கொடிபோல;  கண்
கடை அளி பொழிய -
கண்ணின் கடை அருளைச்சொரிய; பொங்கு
அணை மேல் -
(நுரை போலப்) பொங்குகின்ற (மெத்தென்ற வெள்ளிய)
படுக்கையின்மேலே;  கிடந்தாள்தனை - உறங்கு்கின்றவளை;  விரைவின்
எய்தினாள் -
விரைவாகச் சென்றடைந்தாள்.

     மணிகளால் ஆகிய தாமரைகள் பூத்த பவளக்கொடி பாற்கடல்
அலைமேல் கிடத்தல்போல,  வெண்மையான, தூய அணைமேல் செந்நிற
மேனி உடைய அழகிய தாமரைபோலும் கண்,  கை,  கால்,  முகம் உடைய
கைகேயிஉறங்கினாள் என்பதாம். கைகேயி பவளக்கொடி போல்வாள்;
வெள்ளிய மெத்தை பாற்கடல் படு திரை, கைகேயியின் உறுப்புகள் மணி
நளினம் என உவமை காண்க.  இது  இல்பொருள் உவமையாம்,  “பாற்கடன்
முளைத்ததோர் பவளப் பூங்கொடி, போற்சுடர்ந் திலங்கொளிப் பொன்செய்
கோதை”,  “பௌவ நீர்ப்பவளக் கொடி போல்பவள்” (சிந்தா.2413, 874.)
என முன்னோர் கூறியவற்றை இங்கு ஒப்பிடுக. கடைக்கண்களில்
அருள்வழியக் கிடந்தாள் என உறங்கும்போது இவளைக் கண்டு கூறியதனால்
இவளது உளத் தூய்மையும்,  தூய அன்பும்,  அகத்துள்ள பேரிரக்கமும்
புலனாகும். இத்தகைய பேரருள் உள்ளமோவன்மனத்தோடு தயரதன்பால்
வரம் கேட்டது  என்று உணர்வார்க்கு  உச்சநிலை தோன்ற, இவன் உள்ள
நிலையை இங்குக் கூறினாராம். இத்தகைய அருள் உள்ளமுடையாளையும்
திரித்தாள் எனப் பின்னர்க்கூனியின் சூழ்ச்சியாற்றலைப் புலப்படுத்தவும் இது
வேண்டி நின்றது. இராமனது நாயகத்தன்மை, இலக்குவனதுஅடிமைத்திறம்,
பரதனது தியாக உள்ளம்,  சத்துருக்கனனது அடியார்க்கடியவனாம் தகைமை,
அனுமனின் பக்தி, சுக்கிரீவ மகாராஜாவின் நட்பு, சடாயுவின் தியாகம் ஆகிய
இன்ன பிற நற்குணங்கள்வெளிப்படவும், இராவணாதிகளின் சிறுமையும்
இழிவும் உலகம் அறியவும், இமையோர் துன்பம் தீரத்தக்க காலத்தே தன்
மனத்தைக் கன்மனம் ஆக்கிக்கொண்டு செய்த அருஞ்செயலுக்கு முதல் என்று
கருதி, ‘அளிபொழிய’ என்றார் எனலும் ஆகும்.                      50