கைகேயியின் மறு மாற்றம்  

1452.வெவ் விடம் அனையவள் விளம்ப, வேற்கணான்,
‘தெவ் அடு சிலைக் கை என் சிறுவர் செவ்வியர்;
அவ் அவர் துறைகொறும் அறம் திறம்பலர்;
எவ் இடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு?’ எனா,

     வெவ்விடம் அனையவள் - கொடிய நஞ்சையொத்த கூனி; விளம்ப-
இவ்வாறுசொல்ல;  வேற்கணாள் - வேலையொத்த கண்ணையுடைய
கைகேயி;  ‘தெவ் அடு சிலைக் கைஎன் சிறுவர் - பகைவரை அழிக்கும்
வில்லைப் பிடித்த கைகை உடைய என் புதல்வர்;  செல்வியர்- நலமாய்
இருக்கின்றனர்; அவ் அவர் துறை தொறும் - அவரவர்களுடைய
தொழில்களில் எல்லாம்;அறம் திறம்பவர் - தருமத்திலிருந்து
மாறுபடாதவர்கள்;  (எனவே) ஈண்டு - இப்பொழுது;
எனக்கு; வந்து அடுப்பது - வந்து நேர்வது;எவ் இடர்? - என்ன
துன்பம்; எனா - என்று சொல்லி; (அடுத்த பாட்டில் முடியும்)

     பிறரால் தீங்கு வராது காக்கவல்லவர் ஆதலின் “தெவ்வடு சிலைக்கை”
யுடையவர்;  தாம் தீங்குநெறிகளிற் செல்லாதவர் ஆதலின் ‘அறம் திறம்பலர்;’
அதுவே துன்பம் எப்படி வரும்,  என்ன துன்பம் வரும் என்றாள் கைகேயி.
சிறுவர் என்பது நால்வரையும் குறித்தது.                           54