‘நாளை இராமன் முடி சூடுவான்’  என மந்தரை உரைத்தல்  

1456. ‘ஆடவர் நகை உற, ஆண்மை மாசு உற,
தாடகை எனும் பெயர்த் தையலாள் பட,
கோடிய வரி சிலை இராமன் கோமுடி,
சூடுவன் நாளை; வாழ்வு இது’ எனச் சொல்லினாள்.

     (‘என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு’ என்று கேட்ட
கைகேயிக்கு மந்தரை)  ‘ஆடவர்நகை உற - ஆண்மையுடைய வீரர்கள்
பரிகசிக்க;  ஆண்மை  மாசு உற - ஆண்மைத் தன்மை குற்றம் அடைய; 
தாடகை எனும் பெயர் - தாடகை என்ற பெயரை உடைய;  தையலாள்
பட
- பெண் அழியும்படி;  கோடிய - வளைந்த;  வரிசிலை - கட்டமைந்த
வில்லினை உடைய; இராமன்-;  நாளை-; கோமுடி - அரச மகுடத்தை;
சூடுவன் - சூடிக்கொள்வான்; இது வாழ்வு - இதுவே (கோசலைக்கு வரும்)
வாழ்வு;’  என - என்று;  சொல்லினாள் - சொன்னாள்.

     போரில் பெண்களை எதிர்த்துக் கொல்லுதல் கத்த வீரர்க்கு அழகன்று.
ஆதலின், ‘ஆடவர்பரிகசிப்பர், ஆண்மை மாசுற்றது’ என்றாள். ‘தாடகையைக்
கொல்ல வளைந்த வில்லையுடையவன்’ என்று சொல்லிய வார்த்தையிலேயே,
பெண்ணைக் கொலை செய்தலால் ‘கோடிய சிலை’ நேர்மை தவறியது என்ற
தொனிப் பொருள் தந்து  நயம் செய்சிறது  அத்தொடர். போர் முறை தவறி
இன்று பெண்பாலார் பக்கல் இரக்கமின்றிக் கொலைபுரிந்த இராமன் உன்
திறத்திலும்  நாளை இரக்கமின்றி நடந்துகொள்வான்என்றாளாம். ‘படை
இழந்தோனையும், ஒத்தபடை  எடாதோனையும், மடிந்த உள்ளத்தோனையும்
மகப் பெறாதோனையும், மயிர் குலைந்தோனையும், அடிபிறக்கிட்டோனையும்
பெண்பெயரோனையும்  இன்னோ ரன்னோரையும் கொல்லாது  விடுதலும்,
கூறிப் பொருதலும்’ (தொல் - பொருள்.  புறத்.  65.  நச். உரை) என்பதை
இங்குக் கருதுக. பெண் பெயருடையவர்களையே கொல்லுதல் அறமன்றெனின்
பெண்ணையே கொல்லுதலும்,  எதிர்த்தலும்போரறம் அன்று என்பது 
சொல்லாமலேயே முடிந்தது. ‘தாடகை எனும் பெயர்த் தையல்’ என்னாது
‘தையல் ஆள்’  என்றலின் அவள் பெண்ணுருவில் உள்ள ஆண் என்பது
போலத் தோன்றக் கூறியது கம்பர்சொற்றிறனுக்கு உரைக்கல்லாம். “யாதென்
றெண்ணுவது  இக் கொடியாளையும்,  மாது என்று எண்ணுவதோ
மணிப்பூணினாய்” என்று “பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைத்த”
பொழுது கூறிய விசுவாமித்திரர்கூற்றையும் இங்குக் கருதின், (376, 374.)
இராமன் தாடகையைக் கொன்றதில் தவறு ஏதும் இல்லையென்பது விளங்கும்.
கூனியின் உள்ளக் கொதிப்பு  இராமன்பால் தவறேற்றக் காரணம் ஆதலின்
இங்ஙனம்கூறினாள் என்றார் கம்பர்.                              58