கைகேயி மகிழ்ந்து மாலை பரிசளித்தல் 1457. | மாற்றம் அஃது உரைசெய, மங்கை உள்ளமும் ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்தவால்; வேற்றுமை உற்றிலள், வீரன் தாதை புக்கு ஏற்று அவள் இருதயத்து இருக்கவே கொலாம்? |
அஃது மாற்றம் உரை செய - அந்த வார்த்தையை மந்தரை சொல்ல; மங்கை உள்ளமும்- (அதுகேட்ட) கைகேயியின் மனமும்; ஆற்றல் சால்- பெருமை அமைந்த; கோசலை அறிவும்- கோசலையின் புத்தியும்; ஒத்த - ஒத்திருந்தன; வேற்றுமை உற்றிலள் -(கூனி கருதியது போல) வேறுபாடு கருதினாளில்லை; (ஏனெனில்) வீரன் தாதை - இராமன் தந்தையாகிய தயரதன்; அவள் இருதயத்து - அந்தக் கைகேயியின் இதயத்தில்; புக்கு ஏற்று - புகுந்து இணங்கி; இருக்கவே கொல் - இருந்ததனாற் போலும். கோசலை எவ்வாறு அறிந்தாளோ அவ்வாறே கைகேயி நினைத்தாள் என்பதாகும். காரணம் இருவர்க்கும் நாயகன் தயரதன் என்பதனால் ‘எப்பொழுதும் கைகேயியின் மனத்தில் தயரதன் இணங்கிவீற்றிருத்தலின் தயரதன் மனமே கைகேயி மனமாயினது அன்றி வேறில்லை யாதலின்’ எனக் கூறினும்பொருந்தும். ஆற்றல் என்பது பெருமை; மூவகையாற்றல்களுள் பெருமையும் ஒன்று. மூவகை ஆற்றலாவன -அறிவு, ஆண்மை, பெருமை என்பன. ‘ஆல்’, ‘ஆம்’ அசை. 59 |