மாலையை எறிந்து, மந்தரை கூறுதல்  

1459.தெழித்தனள்; உரப்பினள்; சிறு கண் தீ உக
விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்;
அழித்தனள்; அழுதனள்; அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை - அக் கொடிய கூனியே.

     கொடிய அக் கூனி - கொடுமை படைத்த அந்தக் கூனி;
தெழித்தனள் - சப்தமிட்டாள்;உரப்பினள் - அதட்டினாள்;  சிறுகண் தீ
உக விழித்தனள் -
சிறிய கண்களிலிருந்து நெருப்புப் பொறி சிந்த
விழித்துப் பார்த்தாள்; வைதனள் - திட்டினாள்;  வெய்து உயிர்த்தனள் -
வெப்பமாக மூச்சு விட்டாள்;  அழித்தனள் - (தன்கோலத்தைக்)
கெடுத்துக்கொண்டாள்;  அழுதனள்  - ; அம்பொன் மாலையால் -
(கைகேயி அளித்த) அழகிய பொன் மாலையினால்; நிலத்தை - பூமியை;
குழித்தனள் - குழியாக்கினாள்.

     கூனியின் கொடுமை - பெயரிலும், உடலிலும், சொல்லிலும், செயலிலும்,
குணத்திலும் உள்ளது.குழந்தையாய் இருக்கும்போது விளையாட்டாகச்
செய்த செயலை  வஞ்சம் வைத்துக்கொண்டு  பழிதீர்க்கநினைத்தாள்.
ஆதலின் கொடியள் ஆயினாள். பொன்மாலையை நிலத்தில் எறிந்தாள்;
அது தாக்கி நிலம்பள்ளம் ஆயிற்று. ‘ஏ’ ஈற்றசை.                   61