1460.வேதனைக்கூனி, பின் வெகுண்டு நோக்கியே,
‘பேதை நீ பித்தி; நிற் - பிறந்த சேயொடும்
நீ துயர்ப் படுக; நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்’ என்றாள்.

     வேதனைக் கூனி - துன்பத்தைச் செய்கின்ற கூனியானவள்;  பின் -
பிறகு;  வெகுண்டு நோக்கி - (கைகேயியை) கோபித்துப் பார்த்து;  ‘நீ
பேதை -
நீ அறிவற்றவள்; பித்தி - மனநிலை சரியில்லாதவள்; நீ
நிற்பிறந்த சேயொடும்-
நீ உன்னிடம் பிறந்த பரதனோடும்; துயர்ப்படுக -
துன்பப்படுவாயாக; நான் - ; உன் மாற்றவள் - உன் சக்களத்தி
கோசலையின்; தாதியர்க்கு - தாதிகளுக்கு; நெடிது - நீண்ட காலம்;
ஆட்செய - அடிச்சி வேலை செய்ய; தரிக்கிலேன்’ - பொறுக்க மாட்டேன்;’ என்றாள் - என்று சொன்னாள்.

     இராமன் அரசனானால் கோசலை அரசன் தாயாவாள். கோசலையின்
தோழியர் மற்றவர்களைத்தமக்குப் பணிசெய்ய அதிகாரம் இடுவர் ஆதலின்
‘மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்’என்று மந்தரை உரைத்தாள்.
‘நெடிது’ - இராமன் அரசு வீற்றிருக்கும் காலம்வரை. ஆகவே, அது
நீண்டதாயிற்று.எனவே என் ஆயுள் முழுக்கக் கோசலையின் அடிமைப்
பெண்களுக்கு நான் அடிமை செய்து வாழ வேண்டி வந்துவிடும்;அதற்கு
நான் சம்மதிக்கமாட்டேன் எனறாள் கூனி. தன்மையறியாமல் தனக்கு வரும்
கேட்டை வரவேற்கிறாள்.ஆதலின், கைகேயியைப் பேதை என்றும் பித்தி
என்றும் உரைத்தாள். இப்படியே போனால் கைகேயியாகியநீயும் கோசலைத்
தாதியர்க்கு ஆட்செய்ய வேண்டி வரும் என்பதையும் கூனி குறிப்பால்
அறிவித்தாளாம்.                                             62