1462. | ‘மறந்திலள் கோசலை, உறுதி; மைந்தனும், சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான், இறந்திலன் இருந்தனன்; என் செய்து ஆற்றுவான்? பிறந்திலன் பரதன், நீ பெற்றதால்’ என்றாள். |
‘கோசலை உறுதி மறந்திலள் - கோசலை (தனக்குரிய) நன்மையை மறந்தாளில்லை; (அதனால்)மைந்தனும் - இராமனும்; சிறந்த - மேம்பட்ட; நல் - நல்ல; திருவினில்திருவும் - செல்வங்களுக்கெல்லாம் மேம்பட்ட அரசச் செல்வத்தையும்; எய்தினான் -அடைந்தான்; நீ பெற்றதால் - நீ பிள்ளையாகப் பெற்றதால்; பரதன் -; இறந்திலன்- செத்தானில்லை; என்செய்து ஆற்றுவான் இருந்தனன் - என்ன காரியம் செய்து முடிப்பதற்காக இருந்துகொண்டுள்ளான்; பிறந்திலன் - ‘பிறந்தும் பிறவாதவனே;’ என்றாள்- என்று கூறினாள்.
அரசேற்று முடிசூடல் ஆகிய செயல் இராமனுக்கு உண்டானாற்போலப் பரதன் என் செயவாழ்கின்றான்; அவன் இருந்தும் இறந்தவனே என்றான் கூனி. இதுவும் பரதனுக்கு வருகின்ற இழப்பைக்காட்டி புலம்பி, கைகேயியின் மனத்தைத் திரிக்க முயன்றதாம். திருவினில் திரு - அரசச்செல்வம்; எல்லாச் செல்வங்களிலும் மேம்பட்டது. 64 |