1463. | ‘சரதம் இப் புவி எலாம், தம்பியோடும் இவ் வரதனே காக்குமேல், வரம்பு இல் காலமும், பரதனும் இளவலும், பதியின் நீங்கிப் போய்,. விரத மா தவம் செய விடுதல் நன்று’ என்றாள். |
‘இப் புவிஎலாம் - இந்த உலகமெல்லாம்; சரதம் - மெய்யாக; இவ்வரதனே- இந்த இராமனே; தம்பியோடும் - இலக்குமணனோடும் (சேர்ந்து); காக்குமேல்- (அரசு நடாத்திக்) காப்பானாயின்; பரதனும் இளவலும் - பரதனும், சத்துருக்கனனும்; வரம்பு இக்காலமும் - (இராமன் அரசு செய்யும்) அளவற்ற காலங்கள்; பதியின் நீங்கிப்போய் - அயோத்தியிலிருந்து விலகிச் சென்று; மாதவ விரதம் செயவிடுதல் - உயர்ந்ததவமாகிய விரதத்தைச் செய்யும்படி அனுப்பி விடுதல்; நன்று! - அவனுக்கு நன்மை பயப்பதாம்;’ என்றாள் - என்று கூறினாள். இராமன் ஆட்சியில் நகரவாசம் செய்வதைவிட, வனவாசம் சென்று தவம், விரதம் செய்தால்மறுமைக்காவது பயன் என்றாளாம். இலக்குமணனை இராமன் தம்பி என்றும், சத்துருக்கனனைப் பரதன்தம்பி என்றும் கூறினமை “பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது ......வரதனும் இளவலும்" என்னும் முன்னைய செய்யுளாலும் (307) தேற்றமாதல் காண்க. இப்பாடலால் குறிப்பாக அரசு பெற்று ஆளாதவர் வனவாசம் செய்தல் வேண்டும் எனக் காட்டி, அதனையே பின்னர் (இராமனுக்கு) வரமாக வேண்ட வழிசெய்தாள்மந்தரை என்றும் கூறுலாம். 65 |