1467. | ‘அரசர் இல் பிறந்து, பின் அரசர் இல் வளர்ந்து, அரசர் இல் புகுந்து, பேர் அரசி ஆன நீ கரை செயற்கு அருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்; உரை செயக் கேட்கிலை; உணர்தியோ?’ என்றாள். |
(மந்தரை மீண்டும்) ‘அரசர் இல் பிறந்து - அரச குலத்தில் பிறந்து; பின்- பிறகு; அரசர் இல் வளர்ந்து - அரசு குடும்பத்தில் வளர்ந்து; அரசர் இல்புகுந்து - அரச குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு; பேர் அரசி ஆன நீ - (சக்கரவர்த்தியின்)பட்டத்தரசியாக ஆன நீ; கரைசெயற்கு அருந்துயர்க் கடலில் - கரை இடுவதற்கு முடியாத துன்பக்கடலில்; வீழ்கின்றாய் - வீழ்ந்து கொண்டேயிருக்கிறாய்; உரை செய - (நான்) எடுத்துச் சொல்லியும்; கேட்கிலை - கேட்கின்றாயில்லை; உணர்த்தியோ?’- பின் அனுபவத்தால் உணர்வாயோ?;’ என்றாள் - அரச குலத்தில் பிறந்து வளர்ந்து பட்டத்தரசியாக இருக்கிற உனக்கு, உன் அரசனாகாது மாற்றாள் மகன் அரசன் ஆவதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள எப்படி நேர்ந்தது? என்று கூறினாள்கூனி. உணர்தியோ- அறிவினால் அறிந்து கொள்ளாத நீ அனுபவத்தால் எதிர்காலத்தில் சக்களத்தியிடம்துன்பப்பட்டுப் புரிந்துகொள்வாயோ என்பது பொருள். இனி உனக்கு உணர்ச்சி யுள்ளதோ என்பதுபொருந்துமேற் கொள்க. 69 |