1468. | ‘கல்வியும், இளமையும், கணக்கு இல் ஆற்றலும், வில் வினை உரிமையும், அழகும், வீரமும், எல்லை இல் குணங்களும், பரதற்கு எய்திய; புல்லிடை உகுந்த அமுது ஏயும்போல்’ என்றாள். |
பரதற்கு - பரதனுக்கு; கல்வியும் இளமையும் -; கணக்கு இல் ஆற்றலும் -அளவில்லாத வல்லமையும்; வில்வினை உரிமையும் - வில் தொழிலில் திறமையும்; அழகும், வீரமும் -; எல்லை இல் குணங்களும் - அளவில்லாத நற்குணங்களும்; எய்திய - வந்து பொருந்தி உள்ளன; (அரசன் ஆகாவிடின் அவை அனைத்தும்) புல்லிடை உகுந்த அமுது ஏயும் போல்-புல்தரையில் சொரிந்த தேவர் அமுதம் போலப் பயனற்றதாக ஆகும் போலும்;’ என்றாள் - அரசனாயிருந்தால்குணச்சிறப்புகள் மக்களுக்குப் பயன்செய்யும்; அவனுக்குப் புகழ் தரும். இல்லாவிடில் வீண் என்றால் மந்தரை. கைகேயியை நோக்கி ‘உன் மகனுக்குஅரசன் ஆவதற்கு என்ன குறைச்சல்’ என்று கேட்டாளாம். இவ்வளவு சிறப்புகள் உடைய உன் மகனை உன் அறியாமையால் பாழாக்குகிறாயே என்று இரங்கிக் கூறுவாள்போலப் பேசினாள். ‘புல்லிடை உகுத்தல்’,“வில்லினும் வாளினும் விரிந்த ஆண்தொழில், புல்லிடை உகுத்தனென்” என்று பின் (2214) வருவதும் காண்க. “அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்” என்று (குறள். 720) வள்ளுவர்கூறும் உவமை இதற்கு ஒருபுடை ஒப்பு நோக்கலாகும். 70 |