1470.‘வெயில் முறைக் குலக் கதிரவன்
     முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும்,
     உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை,
     மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால்,
     என் சொனாய்? - தீயோய்!

     ‘தீயோய்!- கொடியவளே!; வெயில்முறை -ஒளிவரிசையை உடைய;
குலக்கதிரவன் - சிறந்த சூரியன்; முதலியமேலோர் - முதலாகிய
உயர்ந்தோர்கள்; உயிர் முதல் பொருள் -உயிர் முதலாகிய பொருள்கள்;
திறம்பினும் - போவதாயினும்;உரைதிறம்பாதோர் - சத்தியத்தினின்றும்
மாறுபடார்; (அத்தகைய) மயில்முறைக் குலத்துஉரிமையை -மயிலினது
முறைமையைக் கொண்ட அரசகுலத்து
உரிமையைஉடைய;  மனுமுதல்
மரபை -
வைவச்சுத மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள
யோத்தியின்அரச பரம்பரையை; செயிர் உற- குற்றம் பொருந்தும்படி; 
புலைச் சிந்தையால் -கீழ்மைப் புத்தியால்; என் சொனாய்?’ -  யாது
பேசினாய்?’

     குலத்தின் முதல்வன் சூரியன்; அவன் மகனாய் இருந்து  முதலில்
அயோத்தியில் அரசாண்டவன்மனு.  ஆதலால் இரண்டையும் கூறினார். 
மயில்முறைக் குலத்து உரிமையாவது - மயிலின் குஞ்சுகளுள்
முதற்பார்ப்புக்கேதோகையின் பீலி பொன்னிறம் பெறும். அதன்
வழிப்பார்ப்புகளுக்கு அவ்வாறாகாது. அதுபோல் மூத்தமகன்அரசுரிமை
பெறுதலும், ஏனையோர் பெறாதொழிதலும் ஆம். அவ்வுரிமையை
உடையமரபு ‘மனுமுதல் மரபு’ என்றார். எனவே, மூத்த மகனாகிய இராமன்
அரசுரிமை பெறுதலும்,  பரதன்,  இலக்குவன்,  சத்துருக்கனன் முதலியோர்
பெறாதொழிதலும் அம்மரபின் செய்தியே என்றாளாம். இனி, கேகயம் என்பது
மயிலைக் குறிக்கும்சொல் ஆதலின், ‘கேகய குலத்து உரிமையை’ என்று
பொருள்கூறி,  கைகேயி தான் பிறந்த குலத்தைச்சுட்டினாள் எனலும் ஆம்.
‘யான் பிறந்த கேகய குலத்துக்கு, புகுந்த மனுமுதன் மரபுக்கும்  குற்றம்
அடைய என்ன வார்த்தை சொன்னாய்?’ என்று கூனியைக் கடிந்தாள்
எனலாம். பெண்டிர்,  புக்க குலத்தையும்,பிறந்த குலத்தையும்  ஒக்க
நினையும் வழக்கம்  உண்டு என்பதை. “புக்க வழிக்கும் போந்த வழிக்கும்,
புகை வெந்தீ,  ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ?”  என்ற  (5224)
பாடற் பகுதியிலும் காணலாம். முதற்பொருளோடு  “பலாவம் பொழிலின்
ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும்,  கலாவம் புனைந்த களிமயில்மூத்தது
எனக் கருத” என்ற  பின்னுள்ளோர் பாடல் (தணிகைப்.  களவு. 244)
பொருந்துவதாகும்.புலை - கீழ்மை. புல் என்பது அற்பம் என்றாகும்.
ஆதலின் அற்பத் தன்மை. எனவே கீழ்மை என்றாயிற்று.மந்தரை கூறியது
அரச குலத்து முறைமைக்கு மாறுபடாமல் பொருந்துமேல் ஏற்றுக்கொள்ளலாம்
என்பதுபோலச்சற்றே கைகேயியின் மனத்தில் மெல்ல மாற்றம்
ஏற்பட்டுள்ளதையும் அறியலாம்.                                   72