1473. | ‘போதி, என் எதிர்நின்று; நின் புன்பொறி நாவைச் சேதியாது இது பொறுத்தனென்; புறம் சிலர் அறியின், நீதி அல்லவும், நெறி முறை அல்லவும், நினைந்தாய் ஆதி; ஆதலின், அறிவு இலி! அடங்குதி’ என்றாள். |
‘அறிவு இலி! - அறிவற்றவளே!; என் எதிர் நின்று போதி - என் எதிரிலிருந்துஅகலுவாயாக; நின் புன்பொறி நாவை - உன்னுடைய அற்ப உரைக்கிடன் ஆகிய நாக்கை; சேதியாது - துண்டித்துப் போக்காமல்; இது பொறுத்தனென் - இக்குற்றத்தைப் பொறுத்தேன்;புறம் சிலர் அறியின் - புறத்தே உள்ள சில மனிதர் அறிவாராயின்; நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் - நீதிக்கும் நெறி முறைகளுக்கும் மாறுபாடாக; நினைந்தாய் ஆதி -சதி செய்தாய் ஆவாய்; ஆதலின்-; அடங்குதி - பேசாமல் அடங்குவாய்’ என்றாள். நீ என் தோழியாதலால் உன் நாவைத் துண்டிக்காமல் விட்டேன். இத்தகைய பேச்சுவெளியார் காதில் விழுந்தால் நீ அரசருக்கெதிராகச் சதி தீட்டியதாக அறிந்து அரச தண்டனை கிடைக்கும்.அதனால் வாயை மூடு’ என்றாள் கைகேயி. அற்பத்தனமாகப் பேசியபடியால் நாக்கைப் ‘புன்பொறி’ என்றாள். 75 |