மந்தரை மீண்டும் பேசுதல் 1474. | அஞ்சி மந்தரை அகன்றிலள், அம் மொழி கேட்டும். நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்தென்ன, ‘தஞ்சமே! உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன்; வஞ்சி போலி!’ என்று, அடிமிசை வீழ்ந்து, உரைவழங்கும்: |
மந்தரை - கூனியானவள்; அம்மொழி கேட்கும் - கைகேயி கூறிய அச்சொற்களைக்கேட்கும்; நஞ்சு தீர்க்கினும் - விடத்தை (மணி, மந்திரம், மருந்து முதலியவற்றால்)தீர்த்தாலும்; தீர்கிலாது - நீங்காது; அது - அந்த விடம்; நலிந்தென்ன- (மீண்டும்) வருத்துதல் போல; ‘வஞ்சி போலி! - வஞ்சிக் கொடி போல்பவளே!; தஞ்சமே! - (எனக்குப்) பற்றுக்கோடாக இருப்பவளே!; உனக்கு உறுபொருள் - உனக்குநன்மை தரும் செயல்; உணர்த்துகை - அளிவித்தலின்று; தவிரேன் - நீங்கமாட்டேன்;’ என்று - என்று சொல்லி; அடிமிசை வீழ்ந்து - (கைகேயியின்) கால்களில் விழுந்து வணங்கி; உரை வழங்கும் - மீண்டும் பேசலானாள். மந்தரையின் பேச்சுகளைத் தொடர்ந்து எட்டுச் செய்யுள்கள் கூறும். விடம் மருந்தாலும் தீராது மீளவும் வருந்துதல் போலும், மந்தரை மீண்டும் கைகேயியின் மனத்தைக் கலைக்க முயல்வது என்றார். முன்பும் கூனியை, ‘வெவ்விடம் அனையவள்’ (1452) என்றார். ‘வஞ்சி போலி’ என்பதைப் பெயராக ஆக்காது, ‘வஞ்சிக்கப்பட்டாய் போலும்’ என்று மந்தரை கூறியதாகவும் கொள்ளலாம். அடி மிசை வீழ்தல் காரியம் சாதிக்க விரும்புவார் செய்யும் போலி ஆகாரம் ஆகும். 76 |