1477. ‘புரியும் தன் மகன் அரசு எனின்,
     பூதலம் எல்லாம்
விரியும் சிந்தனைக் கோசலைக்கு
     உடைமைஆம்; என்றால்,
பரியும் நின் குலப்
     புதல்வற்கும், நினக்கும், இப் பார்மேல்
உரியது என், அவள்
     உதவிய ஒரு பொருள் அல்லால்!

     ‘தன்மகன் அரசு புரியும் எனின் -  தன் புதல்வன் அரசாளுவான்
ஆயின்;  பூதலம்எல்லாம் - இப்பூமி முழுவதும்; விரியும்  சிந்தனை -
(பெற்றது  போதாது  என்றுமேலும் பெறவேண்டும் என்று) அகன்று
செல்லும் மனத்தை உடைய; கோசலைக்கு - கோசலாதேவிக்கு; உடைமை
ஆம் -
சொந்தமாகிவிடும்; என்றால்-; நின்பரியும்குலப் புதல்வற்கும் -
உன்னிடத்து  அன்புடைய சிறந்த புத்திர
னாகியபரதனுக்கும்; நினக்கும் -
உனக்கும்; இப்பார் மேல் - இப்பூமியில்;அவள் உதவிய ஒரு பொருள்
அல்லால் -
அந்தக் கோசலை  கொடுத்த செல்வம் அல்லாமல்; உரியது 
என்? -
சொந்தமாக இருப்பது என்ன?’

     ‘விரியும் சிந்தனை’ என்பது  இயல்பாகவே பேராசையால் விரிந்து
செல்லும் மனம் உடையகோசலை உனக்கு என்ன கொடுப்பாள் என்று
கேட்பது போலப் பொருள்பட்டது. ‘பிறந்த சேயொடும் நீதுயர்ப்படுக’, ‘கரை
செயற்கு அருந் துயர்க் கடலில் வீழ்கின்றாய்’ என (1460,1467) மேல் கூறிய
வற்றை இனி விவரிக்கின்றாள் எனலாம். இனி ஒரு பொருளும் உன்
விருப்பின் படி பெறமுடியாது என்றாளாம்.                         79