1478. | ‘தூண்டும் இன்னலும், வறுமையும், தொடர்தரத் துயரால் ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு, இரு நிதி, அவளை வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால் மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி? |
‘தூண்டும் - (தம்மைப் பிச்சை எடுக்க) ஏவுகின்ற; இன்னலும் - துன்பமும்; வறுமையும் -; தொடர்தர - தம்மைப் பின்பற்றிவர; ஈண்டுவந்து - நின் மனைக்குவந்து; உனை இரந்தவர்க்கு - உன்னிடம் யாசித்தவர்களுக்கு; இருநிதி - மிக்க செல்வத்தை;அவளை வேண்டி - அந்தக் கோசலையைக் கேட்டு; ஈதியோ? - (வாங்கிக்)கொடுப்பாயா?; (அல்லது) வெள்குதியோ? - (அவளைக்) கேட்க மனம் இல்லாமல் நாணப்பட்டுநிற்பாயா?; விம்மல் நோயால் - (இந்த அவல நிலை நமக்கு உண்டாயிற்றே என்ற) துன்ப நோயினால்; மாண்டு போதியோ! - (இதைவிடச் சாவதே மேல் என்று) தற்கொலை செய்துகொள்வாயா(அல்லது); மறுத்தியோ? - (இரந்தவர்களிடமே போய்) இல்லையென்று மறுப்பாயா?; எங்ஙனம்வாழ்தி? - எவ்வாறு வாழப்போகிறாய்?’ ‘புகழே’ சிறந்ததுஎன்றாள் (1472) கைகேயி; அதனை இப்போது எடுத்துக்கொண்டு நீ புகழும்பெற இயலாது என்று சாடுகிறாள் கூனி, புகழ், கொடுப்பதனால் வருவது “உரைப்பார் உரைப்பவை எல்லாம்இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்” (குறள்232) அன்றோ? எனவே, உன்னிடம் வந்து இரந்தவர்களுக்கு நீ எவ்வாறு கொடுப்பாய்? என்று கேட்டான். இராமன் அரசன்; கோசலை அவன் தாய்;உலகம் அவருடைமை; உனக்கு ஏது பொருள்? என்று கைகேயி மனத்தைக் கலக்கினாள். இரப்போர்க்கு ஈய முடியாத வழி இறந்துபடிதலே தக்கது ஆம் ஆதலின், ‘மறுத்தியோ மாண்டு போதியோ’ என்றாளாம். “சாதலின்இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை” (குறள்230) என்பதை இங்குக் கருதுக. “இன்மை யுரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்.தன்மெய் துறப்பான் மலை” என்ற (கலி. 43:26-27) கலித் தொகையும்இதுவே. 80 |