கைகேயியின் உறுதிமொழி 1490. | ‘நன்று சொல்லினை; நம்பியை நளிர் முடி சூட்டல், துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் இவ் இரண்டும் அன்றது ஆம் எனில், அரசன் முன் ஆர் உயிர் துறந்து பொன்றி நீங்குதல் புரிவென் யான்; போதி நீ ’ என்றாள். |
‘(நீ) நன்று சொல்லினை - நீ நல்ல உபாயம் சொன்னாய்; நம்பியை நளிர்முடிசூட்டல் - பரதனைச் செறிந்த மகுடத்தால் சூட்டுதலும்; இராமனைத் துன்று கானத்தில் துரத்தல்- இராமனை நெருங்கிய காட்டில் ஓட்டுதலும்; இவ் இரண்டும் - இந்த இரண்டும்; அன்றது ஆம் எனில் - அல்லாமல் போமாயின்; அரசன் முன் - சக்கரவர்த்தியாகியதயரதன் எதிரில்; யான் ஆர் உயிர் துறந்து - நான் என்னுடைய பெறுதற்கரிய உயிரை விட்டு; பொன்றி - இறந்து; நீங்குதல் - இவ்வுலகை விட்டு நீங்குதலை; புரிவென் -செய்வேன்; நீ போதி - நீ போவாயாக;’ என்றாள் - என்று சொநீன்னாள். இவ்வாறு கைகேயி உரைத்தபடியால் இனி இவள் சிறிதும் மாறமாட்டாள் என்ற உறுதி மந்தரைக்குஉண்டாயிற்று. இவ் வாக்குறுதியைப் பெறவே ‘என் உரை தலை நிற்பின்’ என்று (1486) முன்னர்க்கூனி கூறினாளாம். ‘இரண்டு வரங்களையும் பெறுவேன்; நாயகன் தராவிடின் நான் நமனுலகம் புகுவேன்’ என்று உறுதி உரைத்தாள் கைகேயி. இனியும் கூனி தாமதிப்பின் அவளால்தான் நிகழ்ந்தது என்றுஐயுறும் ஆதலின் அவளை ‘நீ போதி’ என்ற அப்புறப்படுத்தினாள். ‘தணியா’ என்ற முன்பாட்டின் வினையெச்சம் ‘என்றாள்’ என இங்கே முடிந்தது. 92 |