கைகேயி தன் கோலம் அழித்தல்  

1491.கூனி போன பின், குல மலர்க்
     குப்பைநின்று இழிந்தாள்;
சோனை வார் குழல் கற்றையில்
     சொருகிய மாலை,
வாளை மா மழை நுழைதரு மதி
     பிதிர்ப்பாள்போல்,
தேன் அறவாவுறு வண்டினம்
     அலமர, சிதைத்தாள்.

     கூனி போன பின் - தன் பணிப்பெண்ணாகிய  மந்தரை விடை
பெற்றுச் சென்றபின்பு;  குல மலர்க் குப்பை நின்று இழிந்தாள் -
கைகேயி சிறந்த  மலர்களின் குவியலால்ஆகிய படுக்கையிலிருந்து இறங்கி;
சோனை வார் குழல் கற்றையில் - கருமேகம் போன்றதன் நீண்ட
கூந்தல் தொகுதியில்; சொருகிய மாலை - சூடியிருந்த பூ மாலையை; வான
மா மழை  நுழைதரு மதி -
விண்ணிலே பெரிய கார்காலத்து மேகத்தில்
நுழைந்திருக்கின்ற சந்திரனை;பிதிர்ப்பாள் போல் - இழுத்துச்
சிதறவிப்பவள் போல; தேன் அவாவுறு வண்டு இனம்அலமர - பூவில்
உள்ள தேனை விரும்பி மொய்க்கின்ற வண்டுக் கூட்டம் நிலைகெட்டுச்
சுழலுமாறு;சிதைத்தாள் - கூந்தலிலிருந்து பிடுங்கிச் சிதைத்தெறிந்தாள்.

     கூந்தலில் சொருகியிருந்த  பூமாலையைக் கைகேயி  எடுத்தெறிந்தது
மேகத்தில் நுழைந்த சந்திரனைப்பிதிர்ப்பது போல இருந்தது;  தன்மைத்
தற்குறிப்பேற்ற அணி.  குப்பை - தொகுதி. மலர்க்குப்பை- ஆகுபெயராய்ப்
படுக்கையைக் குறித்தது. இழிந்தாள் - முற்றெச்சம். கூந்தலிருந்து மாலையை
எடுத்தெறிந்ததுஅவளுக்கு நேர இருக்கும் அமங்கலத்தைக் குறிப்பாய்க்
காட்டுகிறது.                                                  1