1492. | விளையும் தன் புகழ் வல்லியை வேர் அறுத்தென்ன, கிளை கொள் மேகலை சிந்தினள்; கிண்கிணியோடும் வளை துறந்தனள்; மதியினில் மறுத் துடைப்பாள்போல், அளக வாள் நுதல் அரும் பெறல் திலகமும் அழித்தாள். |
விளையும்தன் புகழ் வல்லியை - வளரும் தன்புகழாகிய கொடியை; வேர் அறுத்துஎன்ன - வேரொடு அறுத்தாற் போல; கிளை கொள் மேகலை - ஒளியைக் கொண்ட மேகலாபரணத்தை;சிந்தினாள்- அறுத்தெறிந்தாள்; கிண்கிணியோடும் வளைதுறந்தனள் - பாதக் கிண்கிணியுடனே கை வளையல்களையும் கழற்றி நீக்கினாள்; மதியினில் மறு - சந்திரனிடத்தில்இருக்கும் களங்கத்தை; துடைப்பாள்போல- அகற்றுபவளைப் போல; அளக வாள் நுதல் -கூந்தலைச் சார்ந்து அமைந்துள்ள ஒளிபொருந்தியநெற்றியில் உள்ள; பெறல்அரும் திலகமும் - பெறுதற்கரிய திலகத்தையும்; அழித்தாள்-துடைத்தாள். மேகலையை அறுத்தெறிந்தது புகழை வேரொடும் அறுத்தது போலும் எனவும், நெற்றியில் திலகத்தைஅழித்தது மதியின் மறுவைத் துடைத்தது போலும் எனவும் கூறினார். இவை தற்குறிப்பேற்றம். திலகத்தின்அருமை நோக்கி ‘அரும் பெறல்’ என்னும் அடை மொழி தந்தார். அறுத்தென்ன - தொகுத்தல் விகாரம்.கிண்கிணி - காரணப் பெயர். கிண்கிண் என ஒலித்தலான். 2 |