1494.நவ்வி வீழ்ந்தென, நாடக மயில்
     துயின்றென்ன,
‘கவ்வை கூர்தரச் சனகி ஆம்
     கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து
     அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள்,
     கேகயன் தனையை.

     கேகயன் தனையை - கேகயன் மகளாகிய கைகேயி; நவ்வி வீழ்ந்து
என -
 மான் விழுந்தாற் போலவும்;  நாடகம்  மயில் துயின்று என்ன -
ஆடும் இயல்புடைய மயில்ஆடல் ஒழிந்து தூங்கினாற் போலவும்; ‘கவ்வை
கூர்தர -
துன்பம் மிக;  சனகி ஆம்கடிகமழ் கமலத்து அவ்வை -
மணங்கமலும் செந்தாமரையில்  வீற்றிருக்கும் தாயாகிய திருமகள்; நீங்கும்
என்று -
அயோத்தியை விட்டு நீங்குவாள்’  என்று கருதி;  அயோத்தி
வந்து அடைந்த -
அயோத்தி நகரத்தை வந்து சேர்ந்த;  அம் மடந்தை
தவ்வை ஆம் என -
அத்திருமடந்தையின்தமக்கையாகிய மூதேவி
என்னுமாறு;  கிடந்தனள் - சோர்ந்து கிடந்தாள்.

     ஓடும் மானையும் ஆடும்  மயிலையும் கேகயன் மகளுக்கு உவமை
கூறுவது இந்நாள் வரை அவளிடம்இருந்த இனிய தோற்றத்தைக் காட்டியது.
திருமகள் இருந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என்று கருதிமூதேவி அங்கு
வந்து குடிபுகுந்ததுபோலக் கிடந்தாள் என்பது தற்குறிப்பேற்றம்.  அவ்வை -
தாய்; தவ்வை - தமக்கை.                                       4