தயரதன் வாக்குறுதி அளித்தல் 1501. | கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன், வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் மின்ன நக்கான்; ‘உள்ளம் உவந்துள செய்வென்; ஒன்றும் லோபேன்; வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை’ என்றான். |
கள் அவிழ் கோதை- தேன் வழியும் கூந்தலையுடைய கைகேயியினது; கருத்து உணராதமன்னன் - எண்ணத்தை அறியாத தயரதன்; வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் - மிகுந்தபேரொளியையுடைய மின்னல்போல; மின்ன நக்கான்- விளங்கும்படி சிரித்து; ‘உள்ளம்உவந்துள செய்வேன்- உன் மனம் விழைந்தனவற்றைச் செய்வேன்; ஒன்றும் லோபேன் -அதில் சிறிதும் உலோபம் செய்யேன்; உன் மைந்தன் - நினக்கு மகனும்; வள்ளல் -பெருவள்ளுலுமான; இராமன் ஆணை - இராமன்மேல் சத்தியம்;’ என்றான் -. கைகேயியின் உபாயம் பயன் தந்தது இதனால் கூறப்பட்டது. தயரதன் நகைபிறர் பேதைமையான்எழுந்தது. கைகேயி இந்நாள்வரை இராமனிடம் பேரன்புடையவன் என்னும் உறுதியால் ‘ உன் மைந்தன்இராமன்’ என்றான். கள்ளவிழ் கோதை; அடையடுத்த ஆகுபெயர். லோபம் - வடசொல்; ஈயாமை என்பதுபொருள். 11 |