1506. | பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன் மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்? வேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன் ஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான். |
பூதலம் உற்று - தரையில் விழுந்து; அதனில் புரண்ட மன்னன் - அதன்மீது நிலைகொள்ளாதுஉருண்ட அரசனாகிய தயரதனது; மாதுயரத்தினை - பெருந்துன்பத்தினை; சொல்ல வல்லார்யாவர் - அளவிட்டுச் சொல்ல வல்லவர் யார்? (ஒருவரும் இல்லை); வேதனை முற்றிட -துன்பம் முதிர்ச்சி அடைய; வெந்து வெந்து - மனம் மிக வெதும்பி; கொல்லன் ஊதுஉலையில் கனல் என்ன - கருமான் (துருத்தியால் ஊதுகின்ற உலைக்களத்துத் தீயைப்போல; வெய்து உயிர்த்தான் - வெப்பம் மிக்க பெருமூச்சு விட்டான். இது கவிக்கூற்று, தயரதன் நெட்டுயிர்ப்பின் வெம்மைக்குக் கொல்லனது உலைக்களம் உவமை. உலைத்தீ ஊதுந்தொறும் மேலெழுந்து மீண்டும் அடங்குவது போல, மன்னனது வெப்பம் மிக்க உயிர்ப்பு மிக்கும் அடங்கியும் நிகழ்ந்தது. வெந்து வெந்து - அடுக்கு மிகுதிப்பொருளைக் காட்டுவது. 16 |