1508. | மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்; ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்; பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;- ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான். |
ஆவிபதைப்ப - உயிர் பதைக்கும்படி; அலக்கண்எய்துகின்றான்- பெருந்துன்பத்தை உறுகின்ற தயரதன்; நிலத்தில்மேவி இருக்கும் - தரையில்(சிறிதுபொழுது) பொருந்தி இருப்பான்; நிற்கும்- எழுந்து நிற்பான்; வீழும் - (மீண்டும்) விழுவான்; ஓவியம்ஒப்ப - சித்திரம் போல; உயிர்ப்பு அடங்கி ஓயும் - மூச்சு அடங்கிஒய்வான்; பாவியை எதிர் உற்றுப்பற்றி - கைகேயியை எதிரே சென்று பிடித்து; எற்ற- மோத; எண்ணும் - நினைப்பான். இதனால் தயரதனது கலக்கநிலை உணர்த்தப்படுகிறது. இராமன்மீது இரக்கமின்றிக் கேடு சூழ்ந்தாளாதலின்கைகேயி பாவி என்று குறிக்கப்பட்டாள். 18 |