கைகேயியின் காலில் விழுந்து, தயரதன் இரத்தல் கலிநிலைத்துறை 1519. | ‘கோல் மேற்கொண்டும் குற்றம் அகற்றக் குறிகொண்டார் - போல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை’ என்னா, கால்மேல் வீழ்ந்தான் - கந்து கொல் யானைக் கழல் மன்னர் மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். |
கந்து கொல் யானைக் கழல் மன்னர் - கட்டுத்தறியை முறிக்கும் யானைப்படையையுடைய வீரக்கழல் அணிந்த அரசர் பலரும்; மேல் மேல் முந்தி வந்து - மேலே மேலே(ஒருவர்க் கொருவர்) முற்பட்டு வந்து; வணங்கி மிடை தாளான் - வழிபட்டு நெருங்குகின்றபாதங்களையடைய தயரதன்; கோல் மேற்கொண்டும்- தாம் ஆட்சியை மேற்கொண்டிருந்தாலும்; குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்போல் - (அதில்வரும்) குற்றங்களை நீக்கக்கருத்துக் கொண்ட நல்ல அரசரைப் போல; மேல் உற்றது உண்டு எனின் - மேலே வரும் நன்மைஉண்டென்றால்; பொறை நன்று ஆம் என்னா - பொறுமை நல்லதாகும் என்று எண்ணி; கால்மேல் வீழ்ந்தான்- கைகேயியின் கால்களில் விழுந்து வணங்கினான். தம் பதவியேபெரிதெனக் கருதாமல் குற்றம் நிகழாது காக்க அரும் பாடுபடும் அரசரைப் போலத்தன் பெருமை நோக்காது கைகேயியைச் சினம் தணிவித்துக் குற்றம் நிகழாது காக்க எண்ணிய தயரதன்அவள் காலில் விழுந்து வணங்கினான். கைகேயி மனம் மாறி வரங்களைத் தருமாறு வேண்டுவது தவிர்ந்தால்.அவளுக்கு வரந்தர மறுத்தலால் வரும் குற்றமும். இராமனுக்கு அரசளிப்பதாகச்சொன்ன வாக்குப் பொய்த்தலும் நீங்கி நன்மை உண்டாகும் என்ற எண்ணிஅவ்வாறு செய்தான். உற்றது - கால வழுவமைதி. 29 |