1520. | ‘கொள்ளான் நின் சேய் இவ் அரசு; அன்னான் கொண்டாலும், நள்ளாது இந்த நானிலம்; ஞாலம்தனில் என்றும் உள்ளார் எல்லாம்ஒத உவக்கும் புகழ் கொள்ளாய்; எள்ளா நிற்கும் வன் வழி கொண்டு என் பயன்?’ என்றான். |
‘இவ் அரசு நின் சேய் கொள்ளான் - இந்த அரசாட்சியை நினக்கு மகனாகிய பரதன்ஏற்றுக்கொள்ள மாட்டான்; அன்னான் கொண்டாலும் - (ஒருகால்) அவன் ஏற்றுக்கொண்டாலும்;இந்த நானிலம் நள்ளாது - இவ்வுலகம் அதனை விரும்பாது; ஞாலம்தனில் உள்ளார் எல்லாம்- உலகில் உள்ள எல்லோரும்; என்றும் ஓத உவக்கும் - எந்நாளும் புகழ்வதைவிரும்பும்; புகழ் கொள்ளாய் - கீர்த்தியைப் பெறமாட்டாய்; எள்ளா நிற்கும்வன்பழி கொண்டு - என்றும் எல்லோரும் இகழ்தற்குரிய வலிய பழியை ஏற்பதனால்; பயன்என் - பயன் யாது?;’ என்றான் -. தயரதன் பரதன் பண்புகள் அறிந்தவனாதலின் அவன் அரசாட்சியைக் கொள்ளான் என்றான்.கொண்டாலும் - உம்மை கொள்ளுதலின் அருமை சுட்டியது. நானிலம் - ஆகுபெயராய் மக்களை உணர்த்திற்று.என்றும் என்பதனைப் பழியோடும் கூட்டி உரைக்க. 30 |