1523. | ‘வாய் தந்தேன் என்றே; இனி, யானோ அது மாற்றேன்; நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே; தாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண் பேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ?’ |
‘யானோ வாய் தந்தேன் என்றேன் - யான் வாயால் வரங்களைத் தந்தேன் என்றசொல்லிவிட்டேன்; இனி அது மாற்றேன் - இனி அதனைத் தவறமாட்டேன்; என்னை நோய்தந்து - எனக்கு வருத்தத்தைத் தந்து; நோவன செய்து - துன்புறத் தக்கவற்றைப் புரிந்து; நுவலாதே - (மேலும்) அத்தகைய சொற்களைச் சொல்லாதே; தன்னை இரந்தால் -தன்னை ஒருவர் இரந்து வேண்டினால்; தாய் தந்து என்ன - தாய் மனம் இரங்கித் தருவதுபோல; தழல்வெம் கண் பேய் - நெருப்புப் போலும் கொடிய கண்களையுடைய பேயும்; தந்தீயும் - கொடுக்கும்; நீ இது தந்தால் - நீ (யான் வேண்டும்) இதனைத்தருவாயானால்; பிழை ஆமோ- தவறாகுமோ?’ இரந்து கேட்டால் பேயும் தாய்போல இசையும் என்றால் பரதனுக்குத் தாயாகிய நீ இசைதல்தவறாகுமோ? என்றான். பேய் என்பதன்பின் இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. தந்தீயும்- தரும்; வினைத் திரிசொல். 33 |