கைகேயி மறுக்கத் தயரதன் மீண்டும் இரத்தல் 1524. | இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்; தன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள், ‘முன்னே தந்தாய் இவ் வரம்; நல்காய்; முன்வாயேல், என்னே? மன்னா! யார் உளர் வாய்மைக்கு இனி?’ என்றாள். |
இகல்வேந்தன்- வெற்றியையுடைய அரசர்க்கரசனாகிய தயரதன்; இன்னே இன்னேபன்னி இரந்தான் - இவ்வாறாகப்பலமுறை சொல்லி வேண்டினான்; தன் நேர் இல்லாத்தீயவள் -தனக்கு நிகரில்லாத தீயவளான கைகேயி; உள்ளம் தடுமாறாள் -மனம்சிறிதும் இரங்கினாள் அல்லள்; மன்னா - அரசே; இவ்வரம் முன்னே தந்தாய் -இந்த வரங்களை முன்னர் வாயால் தந்துவிட்டாய்; நல்காய்- இப்போது செயற்படுத்தமாட்டாய்; முனிவாயேல் - கோபிப்பாயானால்; என்னே - என்னாவது?; வாய்மைக்கு இனி யார் உளர்- இனிமேல் வாய்மையைக் காப்பாற்றுதற்கு யார்இருக்கின்றார்?;’ என்றாள் -. தன் கணவன் எவ்வளவு இரந்து வேண்டியும் இரங்காமையின் ‘தன் நேர் இல்லாத் தீயவள்’ என்றார்.‘தீயவை யாவையினும் சிறந்த தீயாள்’ (1504) என்று முன்னர்க் குறித்தமை கருதத்தக்கது. நல்காய்என்பதனை முற்றெச்சமாக்கிச் செயற்படுத்தாமல் என்றும் பொருள் கொள்ளலாம். ‘மன்னா? யார்உளர் வாய்மைக்கு இனி’ என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 34 |