1527.‘மெய்யே; என்தன் வேர்
     அற நூறம் வினை நோக்கி
நையாநின்றேன், நாவும்
     உலர்ந்தேன்; நளினம்போல்
கையான், இன்று, என்
     கண் எதிர்நின்றும் கழிவானேல்,
உய்யேன்; நங்காய்! உன் அபயம்
     என் உயிர்’ என்றான்.

     ‘மெய்யே - ‘சத்திமே; என்தன் வேர் அற  நூறும் - எனது மூலம்
கெடும்படிஅழிக்கும்; வினைநோக்கி - எனது தீவினையை எண்ணி; நையா
நின்றேன் -
வருந்துகின்றேன்;  நாவும் உலர்ந்தேன் - (உன்னோடு பேசிப்
பேசி) நாக்கும் வறளப் பெற்றேன்; இன்று - இந்நாளில்; நளினம் போல்
கையான் -
தாமரை போலும் கைகளையுடைய இராமன்;என் கண்
எதிர்நின்றும் கழிவானேல் -
என் பார்வையினின்று நீங்கிக் காடு
செல்வான்என்றால்;  உய்யேன் - யான் பிழைத்திருக்கமாட்டேன்;
நங்காய் - (ஆதலால்)பெண்ணே!;  என் உயிர் உன் அபயம் -
என்னுடைய உயிர் உன் அடைக்கலம் ஆகும்’;  என்றான்-.

     தயரதன் இராமன் காடு சென்றால் தன் உயிர் நீங்கிவிடும் என்பதனைத்
தெரிவித்துத் தன்னைக்காத்திடுமாறு கைகேயியை வேண்டினான்.        37