கைகேயி ‘வரத்தைத் தவிருமாறு கூறுதல் அறமோ?’ எனல்  

1528.இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளான்.
     முனிவு எஞ்சாள்,
மரம்தான் என்னும் நெஞ்சினள், நாணாள்,
     வசை பாராள்,
‘சரம் தாழ் வில்லாய்! தந்த வரத்தைத்
     “தவிர்க்” என்றல்,
உரம்தான் அல்லால், நல் அறம் ஆமோ?
     உரை’ என்றாள்.

     இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் - தயரதன் தன்
பால் குறையிரந்துசொல்லும் இனிய சொற்களைக் கேளாதவளும்; முனிவு
எஞ்சாள்
- கோபம் தணியாதவளும்;  மரம்தான் என்னும் நெஞ்சினள் -
மரம் என்று சொல்லத்தக்க வன்மையான மனத்தைக் கொண்டவளும்;
நாணாள் - வெட்கம் இல்லாதவளும்; வசை பாராள் - பழியைப் பற்றிக்
கவலைப்படாதவளுமானகைகேயி;  ‘சரம் தாழ் வில்லாய் - (தயரதனைத்
பார்த்து) ‘அம்புகள் தங்கும் வலியவில்லையுடையே அரசே!; தந்த
வரத்தைத் ‘தவிர்க’ என்றல் -
முன்பு கொடுத்த வரத்தை விட்டுவிடு
என்று வேண்டுவது; உரம்தான் அல்லால் - மன வலிமையேயன்றி;  நல்
அறம் ஆமோ உரை -
நல்ல தருமம் ஆகுமோ சொல்லாய்;’ என்றாள்-.

     கைகேயியின் வலிய நெஞ்சுக்கு மரத்தை உவமையாகச் சொன்னார் -
திருத்தற்கு அரிதாதலின்.இரும்பாயின் நெருப்புக்கு இளகும்; மரமோ
சாம்பலாகுமோ தவிரநெகிழாது. கைகேயி நெகிழாமல் நின்றமை
உணர்த்தப்பட்டது கொள்ளாள், நெஞ்சினள், நாணாள், பாராள் -
வினையாலணையும் பெயர்கள்.                                   38