1530.வீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின்
     கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு
     ஓர் கரை காணான்;
சூழ்ந்தாள் துன்பம் சொற்
     கொடியாள், சொல்கொடு நெஞ்சம்
போழ்ந்தாள், உள்ளப் புன்மையை
     நோக்கிப் புலர்கின்றான்.

     வீழ்ந்தான் - (தயரதன்) மண்ணில் விழுந்தான்;  வீழா - விழுந்து;
வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து - கொடிய துயரமாகிய கடலின்
வெள்ளத்தில்; ஆழ்ந்தான்- அமுந்தினான்; ஆழா - அழுந்தி;
அக்கடலுக்கு ஓர் கரை காணான் - அந்தக்கடலுக்கு ஒர் எல்லை
காணாதவன் ஆனான்; துன்பம் சூழ்ந்தாள் - தனக்குப் பெருந்துன்பத்தைச்
சூழ்ந்துகொண்டவளும்;  சொல் கொடியாள் - கொடிய
சொற்களையுடையவளும்; சொல்கொடுநெஞ்சம் போழ்ந்தாள் - தன்
பேச்சால் மனத்தைப் பிளந்தவளுமான கைகேயியின்; உள்ளன்புன்மையை
நோக்கிப் -
மனத்தின் சிறுமையை எண்ணி;  புலர்கின்றான் -
வாடுகின்றான்.

     துயரத்தைக் கடலாக உருவகித்ததற்கு ஏற்பக் ‘கரை காணான்’ என்றார்.
வீழ்ந்தான் - வினைமுற்று.சூழ்ந்தாள், கொடியாள்,  போழ்ந்தாள் -
வினையாலணையும் பெயர்கள்.                                   40