1531. | ‘ “ஒன்றாநின்ற ஆர் உயிரோடும், உயர் கேள்வர் பொன்றா முன்னம் பொன்றினர்” என்னும் புகழ் அல்லால், இன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைச் கொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ? - கொடியோளே! |
‘எல் வளையார் - ஒளி பொருந்திய வளையலையுடைய மகளிர்; ஒன்றா நின்ற ஆர்உயிரோடும் - உடலோடு ஒன்று சேர்ந்த அரிய உயிருடனே; உயர் கேள்வர் - தம்உயர்ந்த கணவர்; பொன்றா முன்னம் பொன்றினர் - இறப்பதற்கு முன்னே தாங்கள் இறந்தனர்; என்னும் புகழ் அல்லால் - எனப்படும் கீர்த்தியைக் கொண்டனரேயன்றி; இன்றுகாறும்- இன்றுவரை; தம் இறையோரைக் கொன்றார் இல்லை - தம் கணவரைக் கொலை செய்தவர்இல்லை; கொடியாளே- கொடுமையுள்ளங் கொண்டவே!; நீ கொல்லுதியோ - (அவ்வுலகஇயல்புக்கு மாறாக) நீ (என்னைக்) கொல்லுகின்றாயோ -’ இது முதல் ஐந்து பாடல்கள் ஒரு தொடர். 45 ஆம் பாட்டொடு முடியும். அப்பாட்டில் வரும் தோளான்என்பது இவற்றிற்கு எழுவாய். இன்று ஓர் காறும்; ஒர் - அசை. இதுவரை கணவனைக் கொன்ற மகளிர் இல்லை. நீ கணவனாகிய என்னைக் கொல்லுகின்றாய் ஆதலின்உன்போலக் கொடியவர் உண்டோ என்று தயரதன் கைகேயியை இகழ்ந்தான். பத்தினிப் பெண்டிர்கணவன் இறந்தபின் உயிர்வாழா இயல்பினர் என்று நூல்கள் கூறும். “பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே” (புறம்246) “தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல், பெருங் கோப்பெண்டும் ஒருங்கு உடன் மாய்ந்தனன்” (சிலம்பு 3:25: 85 - 86) “காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி, ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின், நன்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்” (மணிமேகலை; 2:42 - 48) “தரைமகளும் தன்கொழுநன் உடலம் தன்னைத் தாங்காமல் தன்கரத்தால் தாங்கி விண்நாட்டு அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்” (கலிங்கத்துப் பரணி, 483) “போரில், விடன் ஏந்தும் வேலாற்கும் வெள்வளையினாட்கும் உடனே உலந்தது உயிர்” (புறப்பொருள் வெண்பா மாலை: (262) ஆகியவை காணத்தக்கன. 41 |