1534. | ‘மண் ஆள்கின்றார் ஆகி, வலத்தால் மதியால் வைத்து எண்ணா நின்றார் யாரையும், எல்லா இகலாலும், விண்ணோர்காறும், வென்ற எனக்கு, என் மனை வாழும் பெண்ணால் வந்தது, அந்தரம் என்னப் பெறுவேனோ?’ |
‘மண் ஆள்கின்றார் ஆகி - நாட்டை ஆளுகின்ற அரசர்களாகப் பட்டம் ஏற்று; வலத்தால் - வலிமையாலும்; மதியால் - அறிவினாலும்; வைத்து எண்ணாநின்றார்யாரையும் - மேலாக வைத்துப் போற்றப்படுகின்ற அரசர்கள் எல்லாரையும்; விண்ணோர்காறும்- தேவர்கள் வரையிலும்; எல்லா இகலாலும் - எல்லாப் போரிலும்; வென்ற எனக்கு- வெற்றி கொண்ட எனக்கு; என்மனை வாழும் பெண்ணால் - என் அரண்மனையில் வாழும்பெண்ணினால்; அந்தரம் வந்தது என்னப் பெறுவேனோ - முடிவு நேர்ந்தது என்று சொல்லத்தக்க நிலையை அடைவேனோ!’ வலமும் மதியும் நிறைந்த மன்னர்களை வென்ற எனக்கு அவையில்லாத மனைவியால்முடிவுவந்துவிடுமோ என்கிறான். மனை வாழும் பெண் - மனைவி இகலால் - உருபுமயக்கம். 44 |