கைகேயி, ‘உரை மறுத்தால் உயிர் விடுவேன்’ எனல் 1536. | ஆழிப் பொன் - தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி, பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில், “ஊழின் பெற்றாய்” என்று உரை; இன்றேல், உயிர் மாய்வென்; பாழிப் பொன் - தார் மன்னவ!’ என்றாள், பகை அற்றாள். |
ஆழிப் பொன் தேர் மன்னவன் - சக்கரங்களையுடைய பொன்னால் ஆகிய தேரையுடையதயரதன்; இவ்வாறு அயர்வு எய்தி - இப்படித் தளர்ச்சி அடைந்து; பொன் தோள் முற்றும்பூழி அடங்க - அழகிய தன் தோள்கள் முழுவதும் புழுதி போர்க்க; புரள் போழ்தில் -(தரையில்) உருளும்போது; பசை அற்றாள் - நெஞ்சில் ஈரமில்லாத கைகேயி; ‘பாழி பொன் தார் மன்னவ - பெருமை பொருந்திய பொன் மாலை அணிந்த அரசே; ஊழின் பெற்றாய்- முறையாகப் பெற்றாய்; என்று உரை - என்று உன்வாயால் சொல்; இன்றேல் -அவ்வாறு சொல்லாவிட்டால்; உயிர் மாய்வென் - நான் உயிரைப் போக்கிக்கொள்வேன்;’என்றாள் -. இப்பாட்டு, கைகேயியின்கல்நெஞ்சைக் காட்டுகிறது. ‘மன்னவ’ என்னும் விளி சொன்னசொல்லைக் காத்தலும், அறத்தைப் போற்றுதலும் அரசனாகிய உன் கடமை ஆகும்.அதனைச் செய்க என்னும் கருத்தைக் காட்டுகிறது. ஆழிப் பொன் தேர் மன்னவன்என்பதில்தசரதன் என்பதன் பொருள் அடங்கியிருக்கிறது. பூழி - புழுதி. பசை - ஈரம், இரக்கம். 46 |