இரவு கழிதல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

1540.சேண் உலாவிய நாள் எலாம் உயிர்ஒன்று
     போல்வன செய்து, பின்
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த,
     ஒன்றும் இரங்கிலா
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு,
     மைந்தர் முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் -
     நளிர் கங்குல் ஆகிய நங்கையே.

     சேண் உலாவிய நாள் எலாம் - நீட்சி பொருந்திய மிகப் பல
நாளும்;  உயிர்ஒன்று போல்வன செய்து - இருவருக்கும் உயிர் ஒன்றே
என்று சொல்லத்தக்க செயல்களைப் புரிந்து; பின் - பிறகு; ஏண் உலாவிய
தோளினான் -
வலிமை பொருந்திய தோள்களையுடையகணவன்; இடர்
எய்த -
துன்பத்தை அடைய;  ஒன்றும் இரங்கிலா - அது கண்டுசிறிதும்
மனம் நெகிழாத; வாள் நிலா நகை மாதராள் - ஒளிமிக்க பற்களையுடைய
கைகேயியின்; செயல்கண்டு - தீச்செயலைப் பார்த்து;  நளிர் கங்குல்
ஆகிய நங்கை -
குளிர்ந்தஇரவாகிய பெண்;  மைந்தர்முன் நிற்கவும்
நாணினாள் என -
ஆடவர் முன்னே நிற்பதற்கும்வெட்கமுற்றாள்
என்னும்படி;  ஏகினாள் - அகன்று போனாள் (இரவு கழிந்தது)

     சேண் உலாவிய நாள் எலாம் - நீண்ட காலமாக;  பல ஆண்டுகளாக;
அஃதாவது திருமணம் ஆனதுமுதல்அதுவரை உள்ள நிண்ட காலம்.
இவ்வளவு  காலமும்  ஈருடலும் ஓருயிரும் போலக் கணவனுடன் ஒன்றுபட்டு
அவன் இன்பத்தில் தான் இன்புற்றும்,  அவன் துன்பத்தில் தான் துன்புற்றும்
வாழ்ந்தவள் இப்போதுமாறுபட்டு இரக்கமின்றி அவன் பெருந் துயரத்திற்கும்
காரணமாகிப் பழியேற்றது கண்டு,  அது பெண்குலத்திற்கேஇழுக்க என்று
கருதிக் கங்குலாகிய நங்கை ஆடவர் முன் நின்றகவும் நாணி அகன்றாள்.
தற்குறிப்பேற்றஅணி. வாள்நிலா - ஒரு பொருட் பன்மொழி.  நிற்கவும் -
உம்மை இழிவு சிறப்பு.                                          50