1541. | எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன - ஏழையால், வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம் கண்டு, நெஞ்சு கலங்கி, அம் சிறை ஆன காமர் துணைக் கரம் கொண்டு, தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன - கோழியே. |
எண்தரும்கடை சென்ற யாமம் - எண்ணப்படுகிற யாமங்களில் கடைசியாய் வந்த யாமத்தில்; இயம்புகின்றன கோழி -கூவுகின்றன வாகிய கோழிகள்; ஏழையால் - அறிவற்றவளானகைகேயியால்;வண்டுதங்கிய தொங்கல் மார்பன்-வண்டுகள் மொய்க்கின்ற மாலையை அணிந்த மார்பினையுடைய தயரதன்; மயங்கி - அறிவுஅழிந்து; விம்மியவாறு எலாம் கண்டு - புலம்பியவற்றை எல்லாம் பார்த்து; நெஞ்சுகலங்கி -மனம் கலங்கி; அம் சிறை ஆன - அழகியசிறகுகளாகிய; காமர் துணைக் கரம்கொண்டு- அழகிய இரு கைகளால்; தம்வயிறு எற்றி எற்றி - தம் வயிற்றில் பலமுறை அடித்துக்கொண்டு; விளிப்ப போன்றன - அழுவன போன்றிருந்தன. இது முதல் பதினாறு பாடல்களில் வைகறைப் பொழுதில் நிகழும் நிகழ்ச்சிகள் புனைந்துரைக்கப்படுகின்றன. வைகறையில் இயல்பாகக் கூவும் கோழிகள் கைகேயியால் துன்புற்ற தயரதனைப் பார்த்து அடித்துக்கொண்டு அழுவன போன்றிருந்தன என்பது தற்குறிப்பேற்ற அணி. இந்த அணிக்கு, ‘சிறை ஆன காமர் துணைக்கரம் என வரும் உருவக அணி அங்கமாய் அமைந்தது. கோழி - பால்பகா அஃறிணைப் பெயர். ஏ - ஈற்றசை. ஒப்பு: | தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரியருள்வாய் - வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம் (நளவெண்பா280) 51 |
|