யானைகள் துயில் ஒழிந்து எழுதல்  

1543.சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த
     இன் துயில் செய்தபின்,
‘வாம மேகலை மங்கையொடு வனத்துள்,
     யாரும் மறக்கிலா
நாம நம்பி, நடக்கும்’ என்று
     நடுங்குகின்ற மனத்தவாய்,
‘யாமும் இம் மண் இறத்தும்’
     என்பனபோல் எழுந்தன - யானையே.

     யானை - யானைகள்;  சேமம் என்பன பற்றி - தமக்குப்
பாதுகாப்பான கூடங்களில்பொருந்தி;  அன்பு திருந்த இன்துயில்
செய்தபின் -
இராமபிரானிடத்து அன்பு மிக இனிதுதூக்கத்தைச் செய்த
பின்பு;  வாம மேகலை மங்கையொடு - அழகிய மேகலை அணிந்த சீதை
யோடு;  யாரும் மறக்கிலா நாம நம்பி - எவரும் மறக்க முடியாத
திருப்பெயரை உடைய இராமபிரான்; வனத்துள் நடக்கும் என்று -
காட்டிற்குச் செல்வான் என்று;  நடுங்குகின்ற மனத்தவாய்- வருந்துகின்ற
நெஞ்சையுடையவனவாய்;  ‘யாமும் இம் மண் இறத்தும் - நாமும் இந்த
நாட்டைவிட்டுச் செல்வோம்;’  என்பன போல் - என்று கூறுவன போல;
எழுந்தன -கிளம்பின.

     யானைகள் எழுந்ததை, இராமபிரான் நாட்டை விட்டுக் காட்டுக்குச்
செல்லப் போவதனால் நாமும்இந்நாட்டைவிட்டுச் செல்வோம் என எழுந்தது
போலத் தோன்றியது என்கிறார். இது தற்குறிப்பேற்றஅணி. சேமம் - கூட்டு
மிடம்;  கூடம். வாமம் - அழகு. மேகலை - எண்கோவை மணி.  யானை -
பால்பகாஅஃறினைப் பெயர்.                                    53