விண்மீன்கள் மறைதல்  

1544.சிரித்த பங்கயம் ஒத்த செங் கண் இராமனை,
     திருமாலை, அக்
கரிக் கரம் பொரு கைத்தலத்து, உயர் காப்பு
     நாண் அணிதற்குமுன்
வரித்த தண் கதிர் முத்தது ஆகி,
     இம்மண் அனைத்தும் நிழற்ற, மேல்
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என,
     மீன் ஒளித்தது - வானமே.

     சிரித்த பங்கயம் ஒத்த - மலர்ந்த தாமரைப் பூக்களைப் போன்ற;
செங்கண்திருமாலை இராமனை - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய
இராமபிரானது;  கரிக் கரம்பொரு அக் கைத்தலத்து - யானையினது
துதிக்கையை நிகர்ந்த அந்தக் கையில்;  உயர்காப்பு நாண் -  சிறந்த
மங்கல நாணை;  அணிதற்கு முன் - பூண்பதற்கு முன்னமே;  இம் மண்
அனைத்தும் நிழற்ற -
இவ்வுலகம் முழுவதும் நிழல் செய்யும் வண்ணம்;
வரித்ததண் கதிர் முத்தது ஆகி- கட்டின குளிர்ந்த கிரணங்களையுடைய
முத்து வரிசைகளையுடையதாய்; மேல் விரித்த - வானத்தில் பரப்பி
வேயப்பட்டிருந்த; பந்தர் - பந்தல்; பிரித்தது ஆம் என- பிரிக்கப்பட்டது
போல; வானம் - ஆகாயம்; மீன் ஒளித்தது- விண்மீன்களோடு மறைந்தது.

     வானத்தையே பந்தலாகவும், விண்மீன்களை முத்துச்சரங்களாகவும்
கொண்டு, காலையில் விண்மீன்கள்மறைவதைப் பந்தலைப் பிரிக்கையில்
முத்துச்சரங்கள் அகற்றப்பெற்றன போன்றிருந்தது என்றார்.இது
தற்குறிப்பேற்றம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன்,  அதற்குரிய தலைவன்
வலங்கையில்காப்புக் கயிறு  (இரட்சா பந்தனம்) கட்டுதல் மரபு. சிரித்த
பங்கயம் - இல்பொருள் உவமை. இராமனை - இராமனுக்கு;  வேற்றுமை
மயக்கம்.                                                     54