மகளிர் எழுதல்  

1545.‘நாம விற் கை இராமனைத் தொழும் நாள்
     அடைந்த நமக்கு எலாம்,
காம விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது’
     என்பது கற்பியா,
தாம் ஒலித்தன பேரி; அவ் ஒலி,
     சாரல் மாரி தழங்கலால்,
மா மயில் குலம் என்ன, முன்னம்
     மலர்ந்து எழுந்தனர், மாதரே,

     நாமவில் கை இராமனை - பகைவர்க்கு அச்சத்தைத் தரும்
கோதண்டம் ஏந்திய கையையுடையஇராமனை;  தொழும் நாள்அடைந்த
நமக்கு எலாம் -
வணங்கும் நல்ல நாளைப் பெற்ற நம்அனைவர்க்கும்;
காமன் விற்கு உடை கங்குல் மாலை - மன்மதனதுகரும்பு வில்லுக்குத்
தோற்றுத்துன்புறுதற்கு இடமான இராப்பொழுது;  கரித்தது- நீங்கியது;
என்பது கற்பியா -என்பதைத் தெரிவித்துக்கொண்டு; பேரி ஒலித்தன -
முரசங்கள் ஒலித்தன; அவ் ஒலி-அந்த ஓசை; சாரல் மாரி தழங்கலால்-
மலைப் பக்கங்களில் தங்கிய மேகம்போல முழங்கியதால்; மாமயில்குலம்
என்ன -
பெரிய மயில்களின் கூட்டம் எழுந்தாற்போல; மாதர்- மகளிர்;
முன்னம் மலர்ந்து எழுந்தனர் - தம் கணவர்எழுவதற்குமுன்னே முகம்
மலர்ந்து துயிலினின்றும் எழுந்தனர்;

     நாமம் - அச்சம். கங்குல் மாலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
ஏ - ஈற்றசை.                                                 55