ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல்  

1551.ஆடகம் தரு பூண் முயங்கிட
     அஞ்சி அஞ்சி, அனந்தரால்
ஏடு அகம் பொதி தார் பொருந்திட,
     யாம பேரி இசைத்தலால்,
சேடகம் புனை கோதை மங்கையர்
     சிந்தையில் செறி திண்மையால்,
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர்,
     நையும் மைந்தர்கள் உய்யவே.

     சேடகம் புனை கோதை மங்கையர் - சிறப்புப் பொருந்திய
மலர்மாலையை அணிந்த மகளிர்; சிந்தையில் செறி திண்மையால் -
மனத்தில் பொருந்திய வலிமையோடு; ஊடல் கண்டவர் - தத்தம் கணவன்
மாரோடு புலந்தவர்கள்; ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி -
(கணவன்மார்) தம் மார்பில் அணிந்தபொன்மாலையோடு தழுவுவதற்கு
(மகளிர் மார்பில் ) உறுத்துமே என்று மிகவும் அச்சம் கொண்டு;
அனந்தரால் - மனத்தடுமாற்றத்தோடு;  ஏடு அகம் பொதி தார்
புனைந்திட -
  பூக்களால்கட்டிய மாலையை அணிந்துகொள்ள;  யாம
பேரி இசைத்தலால் -
அப்பொழுது  கடையாமம் கழிந்ததைஅறிவிக்கும்
முரசம் ஒலித்தலால்;  நையும் மைந்தர்கள் உய்ய - மனைவியரின்
ஊடலால்வருந்தும் கணவன்மார் அத்துன்பத்தினின்றும் தப்பும்படி;  கூடல்
கண்டிலர் -
கூடி  மகிழ்தலைப்பெற்றாரில்லை.

     மகளிரின் ஊடலைக் கணவன்மார் போக்குவதற்கு முன்னே யாமம்
கழிந்ததால் அம்மகளிர் கூடல்பெறாமல் பிரிந்தனர்.  ஊடல் - கணவனும்
மனைவியும் ஓர் அமளியில் இருக்கும்போது,  கணவனிடத்துப்புலத்தற்கும்
காரணம் இல்லாமல் இருந்தும்,  மிகுந்த காதலால் ஒரு காரணத்தைக்
கற்பித்துக்கொண்டுமனைவி மனம் மாறுபட்டு நிற்றல்.  மைந்தர் உய்யக்
கூட்டம் நிகழாமையால் மகளிரும் வாடினர் என்பது விளங்கும்.         61